புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு!!

 
tn

சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் 20 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, இன்று (ஜூன் 16) திறந்து வைத்தார்.

tn

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர். சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.



பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம்,
தாம்பரம் மாநகரம் – சேலையூர், ஆவடி மாநகரம் – எஸ்ஆர்எம்சி.,
தாம்பரம் மாநகரம் – வண்டலூர்,
வேலூர் மாவட்டம் – காட்பாடி,
திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை ஊரகம்,
கடலூர் மாவட்டம் – திட்டக்குடி,
கரூர் மாவட்டம் – கரூர் ஊரகம்,
புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டைபட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு,
திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை,
கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம்,
ஈரோடு மாவட்டம் – பெருந்துறை,
கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை,
மதுரை மாவட்டம் – ஊமச்சிக்குளம்,
திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊரகம்,
தேனி மாவட்டம் – பெரியகுளம்,
ராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர்,
திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மாதேவி,
தென்காசி மாவட்டம் – புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.