மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகளை காலி செய்வதா? - கேரள அரசிற்கு ராமதாஸ் கண்டம்

 
Ramadass

மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படியும் கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கேரள மாநிலத்தின் எல்லைகளை டிஜிட்டல் மறு அளவீடு செய்யும் பணி நவம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மூணாறை அடுத்த இக்கா நகரில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான 60 வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தேவி குளம் வட்டார வருவாய்த்து றையினர் அறிவிக்கை அனுப்பியுள்ளனர். தமிழர்கள் வீடுகளை காலி செய்யாவிட்டால், நாளை மறுநாள், (29-ந்தேதி) அந்த வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவிகுளம் வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.  கேரள அரசின் எல்லை அளவீட்டுக்கு மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகள் எந்த வகையிலும் தடையாக இல்லை. அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தவறாமல் வரி செலுத்தி வருகின்றனர். அதே பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத தேவிகுளம் வருவாய்த் துறையினர், தமிழர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பது பாகுபாடானது ஆகும். தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அவர்களை அங்கிருந்து அகற்ற கேரள அரசு துடிப்பதாகவே இந்த நடவடிக்கையை பார்க்கத் தோன்றுகிறது. 

ramadoss

கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால், தமிழக எல்லை ஆக்கிரமிக்கப்படுவது மட்டுமின்றி, மராட்டியத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே எவ்வாறு எல்லைப் பிரச்சினை தீராத சிக்கலாக உருவெடுத்துள்ளதோ, அதேபோல் தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையிலும் எல்லைச் சிக்கல் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும். அதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு; அதை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படியும் அம்மாநில அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.