முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற, பாமக தலைவர் அன்புமணி...

 
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற, பாமக தலைவர் அன்புமணி...


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள  அன்புமணி ராமதாஸ், இன்று தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில் நேற்று  பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளாக  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி இருந்து வந்த நிலையில்,   தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், ஆட்சிப் பொறுப்புக்கு  அழைத்து செல்லும் வகையிலும்  பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு பொதுக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அன்புமணி

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுபேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேரு அரசியல் தலைவர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினமே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின்,  “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்புமணி ராமதாஸ், காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அதனைத் தொடர்ந்து,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளார்.