"தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை?" - ஷவர்மா உணவுகளை தவிர்க்க அமைச்சர் அட்வைஸ்!!

 
masu

மக்கள் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த முகாம்களை நேரில் பார்வையிட்ட பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "கேரளாவை போன்று தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழகத்தில் ஷவர்மா கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . ஷவர்மா தயாரிப்பதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும்; பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

shawarma

இதனிடையே கேரளாவில் கடந்த வாரம் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  அத்துடன் மேலும் அங்கு 18 பேர் ஷவர்மா சாப்பிட்டதால் வாந்தி , மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோடை வெப்ப காலத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதன் மூலம் உடல் நிலை பாதிக்கப்பட்டது இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து கேரளாவில் ஷவர்மா கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது.

ttn
இதன் எதிரொலியாக தமிழகத்திலும் பல கடைகளில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் வாந்தி ,மயக்கம் ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெளி மாநில , வெளிநாட்டு உணவுகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.