திருமாவுடன் பேரறிவாளன் சந்திப்பு! “பேரறிவாளனுக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர்பில்லை”

 
Perarivalan

நீதியரசர் சதாசிவம் தீர்ப்பை படித்துப் பார்ப்பவர் யாரும், பேரறிவாளனை குற்றவாளி என தெரிவிக்க மாட்டார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

Image

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோரை பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் சந்தித்தனர். சந்திப்பின்போது பேரறிவாளனுக்கு திருமாவளவன், புத்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து திருமாவளன், பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அற்புதம்மாள்,  “தனது மகன் விடுதலைக்கு துணையாக தொல்.திருமாவளவன் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கவே நேரில் சந்தித்தோம்” என தெரிவித்தார். அதன்பின் பேசிய பேரறிவாளன், “தனது மூத்த சகோதரனாக இருந்து, தொடர்ந்து குடும்பத்தில் ஒருவராக உளப்பூர்வமுடன் ஆறுதலாய் நின்றவர் அண்ணன் திருமா” எனக் கூறினார். 

Image

பின்னர் பேசிய திருமாவளவன், “பேரறிவாளன் விடுதலை, மனநிம்மதியை அளிக்கிறது. கட்சி, மொழி என்ற எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் இந்த குற்றத்துக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என விசாரிக்கும் போது தெரிய வந்தது. பேரறிவாளன் விடுதலையில், தமிழக அரசின் பங்கு மிக முக்கியமானது. பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ், அதன் கடமையை செய்து வருகிறது. நீதியரசர் சதாசிவம் தீர்ப்பை படித்துப் பார்த்தால் யாரும் பேரறிவாளனை குற்றவாளி என கூற மாட்டார்கள்” எனக் கூறினார்.