பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா : ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து!!

 
eps ops

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்  சதய விழாவிற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ttn

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழகத்தின் நிலப் பரப்பை வரலாறு போற்றும் வகையில் கி.பி. 705 முதல் கி.பி. 745 வரை ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா 23.5.2022 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.தனது நீண்ட அரச வாழ்வில் 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் நிகரில்லா மாவீரனாக வாழ்ந்தார் என்பதை வரலாற்றில் படிக்கின்றோம். தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும், பேரரசர் பெரும்பிடு முத்தரையர் அவர்கள் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது. இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1996-ஆம் ஆண்டு தனது முதலாவது ஆட்சிக் காலத்தில், திருச்சி மாநகரின் மையப் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருஉருவச் சிலையை நிறுவினார்கள். இவரது பிறந்த நாளை 2002-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடவும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள்.

ops eps

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில், 23.5.2022 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.