கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கலைஞரின் பங்கு இணையற்றது - பினராயி விஜயன் புகழாரம்..

 
pinarayi

கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது  என கேரளா மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  
 kalaignar
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி அரசியல்  தலைவர்கள் பலரும்  கலைஞரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை, அமைச்சர்கள், எம்.பிக்கள், திமுக தொண்டர்களுடம்  அமைதி பேரணியாக சென்ற அவர் அங்கு  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  கருணாநிதி

 இதேபோல் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும்  கலைஞருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  அந்தவகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார்.  இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  “திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை திரு. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.