தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

 
Thirumullaivayal Thirumullaivayal

சென்னை திருமுல்லைவாயிலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை திருமுல்லைவாயலில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை  நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த தொட்டியை சுத்தம் செய்ய எண்ணிய அந்த வீட்டின் உரிமையாளர் பிரேம்குமார் தொட்டியை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கியதில் பிரேம் குமார் மயங்கி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை பார்த்த பிரேம்குமாரின் மகன் பிரதீப் குமார் கூச்சலிட்ட நிலையில், பக்கத்து வீட்டுகாரர் சாரநாத், பிரமோத் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து மூவரும் சேர்ந்து தொட்டியில் விழுந்த பிரேம் குமாரை தூக்குவதற்காக தொட்டிக்கு உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது மூவரையும் விஷவாயு தாக்கிய நிலையில், மூவரும் மயங்கி விழுந்தனர். 

Thirumullaivayal

தகவலறிந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், பிரேம்குமார், அவரது மகன் பிரதீப் குமார்,  பிரமோத் குமார் ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சாரநாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.