"பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் கரும்பு" - சசிகலா கோரிக்கை!!

 
sasikala

திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்கிட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுக்குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பதால் கரும்பு விவசாயிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு வழங்குவதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் அளிக்காமல் விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

sasikala

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக நம் கரும்பு விவசாயிகள் பெரும் அளவில் பயனடைந்தனர். ஆனால், திமுக தலைமையிலான அரசு இந்த வருடம் கரும்பு கொள்முதல் செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை இதுவரை எடுக்காமல் இருப்பதால், தமிழக அரசை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகள் மிகவும் கலக்கமடைந்து இருக்கின்றனர். தமிழக விவசாயிகள் ஏற்கனவே புயல், மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக அரசும் கரும்பு கொள்முதல் செய்யாமல் போய்விட்டால், தமிழக அரசை நம்பி கரும்பை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

rajinikanth and cm stalin

திமுக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கொடுத்த தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பினை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். எனவே, தமிழக அரசுக்கு தரமான மளிகை பொருட்களை எவ்வாறு கொள்முதல் செய்வது என்று தெரியாதபோது, மீண்டும் அந்த விஷப்பரீச்சையில் இறங்கி மக்களை இந்த வருடமும் கொடுமைப்படுத்துவதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ரொக்கமாக பணம் கொடுத்துவிடலாம். ஆனால் அதே சமயம் நம் நெசவாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும். இன்றைக்கு உள்ள நிதிநிலை நெருக்கடியில், யாருக்கும் பயனளிக்காத பேனா சிலை அமைக்க 80 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவழிக்க தயாராக இருக்கும் தமிழக அரசுக்கு நெசவாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் ஒரு முழு கரும்பும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி விரைந்து எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.