ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கிறார் - பொன்னையன் பேட்டி

 
ponnayan

ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற 21ம் தேதி ( புதன்கிழமை ) ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Ops

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க முன்னோட்டம் பார்க்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அதிமுகவின் ஒரு உறுப்பினராக கூட இல்லை. அவருக்கு அதிமுகவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.அதிமுகவுக்கு அவர் திரும்பி வர எந்த வாய்ப்பும் இல்லை. தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு கொண்டு வருகிறது. நிலைமை இப்படியிருக்க ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்ட இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். புதிய கட்சிக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யவே இந்த கூட்டத்தை ஓபிஎஸ் கூட்ட வாய்ப்பு உள்ளது. அதை தவிர அவருக்கு வேறு எந்த ஒரு வழியும் இல்லை. இவ்வாறு கூறினார்.