சாம்பாரில் விழுந்த பூரான்.., மயங்கிய மாணவிகள்.. நாகையில் பரபரப்பு..

 
சாம்பாரில் விழுந்த பூரான்.., மயங்கிய மாணவிகள்..  நாகையில் பரபரப்பு..

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு  பூரான் விழுந்த  சாம்பார் தோசை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்,  அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு  வருகிறது.  இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.  இந்த உணவை  சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதுள்ளது. பின்னர்  உடனடியாக இந்த மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.  அதில் 20-ற்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டதாகவும்,  30-ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சாம்பாரில் விழுந்த பூரான்.., மயங்கிய மாணவிகள்..  நாகையில் பரபரப்பு..

இதனையடுத்து    மாணவிகள் சாப்பிட்ட  சாம்பாரை  சோதித்து பார்த்ததில்,  அதில் பூரான் விழுந்து  இறந்து  கிடந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே  அதனை சாப்பிட்ட 50-ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது  தெரியவந்தது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சிகிச்சைக்கு வந்த 30 மாணவிகளில் இருவருக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும்,  மற்ற 28 மாணவிகள் பூரான் கிடந்த உணவை சாப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.  அத்துடன்   முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 30  மாணவிகளும்,   நலமுடன்  செவிலியர் பயிற்சி பள்ளிக்கு திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.