"முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்துக" - அன்புமணி கோரிக்கை!!!

 
pmk

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குப்  பிறகே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

pmk

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட  பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு  மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  தொடக்கக் கல்வி துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும்  முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 5% உள்ஒதுக்கீடு செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இந்த சூழலில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கான அறிவிப்பு தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்டது.


இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அநீதி!
ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டால்,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  விரும்பிய இடமாறுதல் கிடைக்காது!உயர்நீதிமன்றத் தடையை விலக்கச் செய்து முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வையும், பின்னர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வையும் நடத்த வேண்டும். அது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமநீதி வழங்குவதாக அமையும்!" என்று பதிவிட்டுள்ளார்.