‘ஏழ்மை டூ இந்தியாவின் ஏவுகணை நாயகன்..’ - கலாமின் சாதனை பயணம்...

 
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து,   இந்தியாவின்  ஏவுகணை நாயகன் என்று  போற்றப்பட்ட அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் என்று அனுசரிக்கப்படுகிறது..

1931 ஆம் ஆண்டு இதே நாளில் ( அக்டோபர் 15)  பிறந்தவர்  அப்துல் கலாம்..  குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி கனவுகளை தொலைத்து விடாமல்,  இளமைக்  காலத்திலேயே நீண்ட நெடிய போராட்டங்களுக்கிடையே பள்ளி கல்வியையும் கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தவர்.   ராமேஸ்வரத்தில் தனது பள்ளி படிப்பை முடித்த அவர்,  திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று,  பின்னர் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.  அதன்பின்னர் 1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் முதலில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். பணியாற்றிய துறையை கேட்டவுடன் அப்போதே ஆயிரத்திலும்,  லட்சத்திலும் சம்பளம் வாங்கி இருப்பார் என்று என்ன வேண்டாம்.  அவரது ஆரம்ப கால சம்பளம் 250 ரூபாய் மட்டும் தான்.

APJ Abdul Kalam

விண்வெளித் துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவுக்கு ஒரு கனவாகவே இருந்த நிலையில் அந்தக் குறையைப் போக்குவதில் முழு கவனத்தையும் செலுத்திய அவர்,  எஸ்.எல்.வி (SLV) உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார்.  அதன் பிறகு தொடர்ந்து சிந்தனையாளும்,  உழைப்பாளும் படிப்படியாக  முன்னேறி வந்த அப்துல் கலாம்,   1980 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகினி செயற்கைக்கோள் திட்டத்தில் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். ரோகிணி செயற்குழு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியாவும் முதன்முதலாக வெண்வெளித் துறையில் காலடி எடுத்து வைத்து வரலாறு படைத்தது..  பின்னர் அவரது தலைமையின் கீழ்  திரிசூல்,  அக்ணி,  பிரித்வி  ஆகிய  ஏவுகணைகள் உருவாக்கப்பட்டதை அடுத்து “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்று அழைக்கப்பட்டார்.  

அப்துல் கலாம்

1992 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும்  இருந்து வந்தார் அப்துல் கலாம்..   இந்த இடைப்பட்ட காலத்தில் 1998 ஆம் ஆண்டு பொக்ரான் - II அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்து, அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் இணைத்தார்.  20 ஆண்டுகாலம்  இஸ்ரோவில் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்ற கலாம்,   அறிவியல் ஆலோசகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்திய பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே ஏவுகணை உருவாக்கும் தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

APJ Abdul Kalam
இந்திய  தலைவர்களிலேயே குழந்தைகள் மற்றும் இளம் வயதினரால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம். புகழ்பெற்ற விஞ்ஞானியான இவர் ஓய்வு பெற்ற பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து , அவர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டி வந்தார். அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், ராக்கெட்களை தயாரித்தது ஒருபுறமிருக்க,  மாற்றுத் திறனாளிகளுக்காக எடை குறைந்த செயற்கைக் கால்கள், இதய நோயாளிகளுக் கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுப்பிடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் பயணத்தை தொடங்கிய ‘இந்திய ஏவுகனை நாயகனின்’ கனவுகளை நனவாக்க நம்மால் ஆன பங்களிப்பை வழங்குவோம் என அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம்..