தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு.. - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்..

 
தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ2  உயர்வு...

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள்  பால், தயிர் ஆகியவற்றின் விலையை  லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளன.  

தமிழகத்தில் அரசு சார்பில் ஆவின் நிறுவனம் மூலம் பால், தயிர் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் ஆவின் நிறுவனத்தைத் தாண்டி  பல தனியார் நிறுவனங்கள்  பால் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்து வருகின்றன.  ஆவின் நிறுவன பாலுக்கும், தனியார்  நிறுவன  பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருகிறது. இதனால்  கடைகளில் ஆவின் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது.  ஆனாலும், தனியார் நிறுவன பால் விலை கடந்த ஆண்டில் மட்டும்  4 முறை உயர்த்தப்பட்டது.

பால்

இந்நிலையில், சில தனியார்பால் நிறுவனங்கள்  மீண்டும்  பால், தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி  அறிவித்துள்ளன.  அதில்  ஒரு நிறுவனம் நேற்றே விலையை உயர்த்தியது. மேலும்  4 தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு  இன்று (ஜன.20) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள், பால் முகவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தனியார் நிறுவனங்களில் பால் விலை உயர்வு.. 20 ஆம் தேதி முதல் அமல் !

அதன்படி, தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. இதேபோல்,  தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது.  இந்நிலையில்  தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும்  தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து  அச்சங்கம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தனியார் பால் நிறுவனம் தன்னிச்சையாக விலை உயர்த்துவதைதடுக்க வேண்டும். பால் கொள் முதல், விற்பனை விலையை அரசு நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.