தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை!!

 
ttn

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன்  வலியுறுத்தியுள்ளார்.

fisher

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வேதனைக்குரியது.நேற்று முன் தினம் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர். இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து செல்வது நீடித்து வரும் வேளையில் இப்போது மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை அரசின் நியாயமற்ற நடவடிக்கையாகும்.

gk

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு, இலங்கை அரசுக்கு கண்டிப்போடு எடுத்துக்கூற வேண்டும். மேலும் இது போன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை படிப்படியாக இழக்க நேரிடும். இதனால் மீனவச் சமுதாயம் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே போதிய பொருளாதாம் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக நடைபெற வேண்டும். இதற்கு மத்திய அரசு, இலங்கை அரசோடு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கை எடுத்து அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு துணை நிற்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களையும், 2 படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.