திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை - ஆளுநர் தமிழிசை பதிலடி..

 
tamilisai


திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிவைக்கும் வகையில்  ஆட்சி நடைபெற்று வருவதாகவும்,   புதுவையிலும்  திராவிட மாடல் ஆட்சி மலரும் என்றும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பேசியிருந்தார்.  ஆனால் புதுச்சேரிக்கு  திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை என  அம்மாநில துணை நிலை ஆளுநர்  தமிழிசை  சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம் தான் தற்போது தேவை. புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிலத்தை முதலில் அவர் தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை. புதுவையில் கவர்னரின் தலையீடு என குற்றம் சாட்டுகிறார்கள்.

MK Stalin

ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட கவர்னரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் கவர்னர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது. கர்நாடகத்தில்தான் முதல்-மந்திரி பொம்மை தலைமையில் ஆட்சி நடக்கிறது. புதுவையில் அல்ல. திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதுதான் திராவிட மாடலோ ? 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை. ” என்று கூறினார்.