கடல் சீற்றத்தால் இரண்டாக உடைந்த புதுச்சேரி பழைய துறைமுக பாலம்

 
puduchery

புதுச்சேரியில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான துறைமுக பாலம் கடல் சீற்றத்தின் காரணமாக நள்ளிரவில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதுச்சேரி கீரப்பாளையம் பகுதியில் இருந்த துறைமுக பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து  கடந்த 1958 ஆம் ஆண்டு புதிய துறைமுக பாலம் கட்டுபானப்பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டு, 1962 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதன் மூலம் அப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள்  நடைபெற்று வந்தது. காலப்போக்கில் துறைமுகம் கையாளும் பணி நிறுத்தப்பட்டதால் அந்த பாலம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளானது. 

puduchery

இதனால் பொதுமக்கள் அந்த பாலத்தை பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வந்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பாலத்தில் அமர்ந்து பொழுதை கழித்து வந்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இந்த பாலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்பட படபிடிப்புகளும் நடைபெற்றுள்ளன. 

puduchery

பாலத்தின் மேற்பரப்பு பலமாக இருந்தாலும் அடிப்பகுதி கான்கிரிட் துாண்கள் சேதமடைந்து பலவீனமானதால் பொதுமக்கள் துறைமுக பாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றமாகவும், அலைகள் அதிக உயரத்தில் எழுந்ததன் காரணமாக சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தின் மையப்பகுதியில் நள்ளிரவில் விரிசல் விழுந்து சேதமடைந்தது. ஏற்கனவே பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் பாலம் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மீனவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.