எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார் - புகழேந்தி பரபரப்பு பேட்டி

 
Pugazhendi

நெடுஞ்சாலைத்துறையில் 4500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அ.தி.மு.க.வின் மன்னனாக முடிசூட முடியாது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில் அவர் விரைவில் சிறைக்கு செல்வார்.  பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர். எப்போதும் ஒரேமாதிரிதான் இருப்பார். கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். பழனிசாமி கூடவே இருந்து அவரை காலி செய்யும் பணியை செய்து வருகிறார்.

pugazhendi

 

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா என்னிடம் பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு என்று கூறினார். இந்தியாவின் ஊழல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலாக செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழலில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டுவது கண்டணத்துக்குரியது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்
.