கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் தகவல்

 
ragupathi

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி  ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.  கலவரத்தில், கனியாமூர் பள்ளி முழுவதுமாக சேதமடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் 13ம் தேதி முதல் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கனியாமூர் தனியார் பள்ளி உள்ளது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 360 பேர்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

kallakurichi

இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி  தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார். 
அதன்படி, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தது. அதில் ஆசிரியைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேரும் மதுரை மாவட்டம் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.  
 
இந்நிலையில், கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.