நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது!!

 
ttv dhinakaran

நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

tn

தமிழகத்தில் கொரோனா  காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் மூலம் 2,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே நூல் விலையை கட்டுபடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் .  நூல் இருப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும் . தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் ஜவுளி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே  பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், "நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கவனித்து, நிறைவேற்றி தர வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தோடு தொடர்புடைய இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்று தொடர்ச்சியாக எழுந்து வரும் குரல்களை மத்திய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல" என்று கூறியுள்ளார்.