ராமேஸ்வரம் -ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை - மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..

 
ராமேஸ்வரம் -ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை - மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..

ராமேஸ்வரம்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை  மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு மதுரை கோட்ட  ரயில்வேக்கு உள்பட்ட ராமேஸ்வரத்தில் இருந்து  வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் ஹூப்ளி -  ராமேசுவரம்  சிறப்பு கட்டண ரயில் வருகிற 7-ந் தேதி வரை  இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அதேபோல் மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல் அடுத்த (ஜனவரி) மாதம் 8-ந் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.  தற்போது இந்த ரயில் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

train

அதன்படி, “ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர ரயில் (வ.எண்.07355) ஹூப்ளியில் இருந்து வருகிற மார்ச் 25-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ராமேசுவரம்-ஹூப்ளி வாராந்திர ரயில் (வ.எண்.07356) ராமேசுவரத்தில் இருந்து வருகிற மார்ச் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.03 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி ரயில் நிலையம் சென்றடைகிறது.

ரயில்

இந்த ரயில்களில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யஷ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.