எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - அமைச்சர் மா.சு வெளியீடு..

 
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - அமைச்சர் மா.சு வெளியீடு..

தமிழகத்தில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  இன்று வெளியிட்டார்.  

நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ,  கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  அதன்படி மொத்தம் 40,264 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக  மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்தது. அவற்றில் அரசு கல்லூரிகளில் சேர 25,059 பேரும், தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 15,205 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.  அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களில் 5,022 பேர் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

mbbs

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்கள், சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில்  125 இடங்கள், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள  3,050 இடங்கள்  அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் நிரப்பப்பட உள்ளன.   அதேபோல்  அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 848 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்  1, 290 இடங்கள் நிரப்பப்படுகின்றன.  நடப்பு ஆண்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 455 பேரும்,   பல் மருத்துவப் படிப்பில் 114 பேரும்  சேர்க்கப்படுவார்கள்.

mbbs

பல் மருத்துவப் படிப்பை பொருத்தவரையில் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்  1960 இடங்களும்  மாநில அரசு இடங்களாக வைக்கப்பட்டு சேர்க்கை நடக்கிறது. இந்த நிலையில்  இன்று காலை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்குரிய ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  வெளியிட்டார்.