ராசிபுரம் : விபத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ; சுற்றுலா வேன் மோதி பலி..

 
ராசிபுரம் : விபத்து  சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ; சுற்றுலா வேன் மோதி பலி..


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த  2 காவல்துறையினர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானதில்,  இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை ஏகே சமுத்திரம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  அந்தவழியே வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல,  மணல் மூட்டைகள் அடுக்கி தகர டிரம்கள்  வைத்து தடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மதுரையிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் ஒன்று,  மாற்றுப்பாதை  பலகையை  கவனிக்காமல் வேகமாக வந்து  தடுப்புகள் மீது  மோதி விபத்துக்குள்ளானது.  இதனை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை  அப்புறப்படுத்தி போக்குவரத்தை  சரி செய்து கொண்டிருந்தனர்.

accident

அப்போது அவ்வழியே திருநள்ளாறு,  தஞ்சாவூரிலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று,  சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் தலைமை காவலர் தேவராஜன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.   இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் பலரும் கூட காயமடைந்தனர். அவர்கள்  அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

dead body

  விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில்,  காவலர்கள்  விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி   கொண்டிருக்கும் போது, அவ்வழியே லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் விசாரித்தபோது ஓட்டுநர் மதுபோதையில் இருந்துள்ளார்.  அவரை கீழே இறங்கச் சொல்லி பேசிக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் காவலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.