"தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு" - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!!

 
ration card

விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும் என்று  அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

ration

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அன்றைய தினம் திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வத்தால்  தாக்கல் செய்யப்பட்டது.

ration shop

இதைதொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இரண்டாம் நாள் பொது விவாதத்தின்போது கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பரந்தாமன்,  திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் எத்தனை?  வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி,  "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதி உள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும்.  கடந்த மே மாதம் முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை 10 மாதங்களில் 15 லட்சத்து 74 ஆயிரத்து 543 விண்ணப்பங்கள் குடும்ப அட்டை கோரி வந்துள்ளன.  இதில் தகுதியுடைய 10 லட்சத்து 92 ஆயிரத்து 64 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது "என்றார்.

tn

அத்துடன்  பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் அவர்கள் தங்கள்,  பிரதிநிதிகள் வாயிலாக இன்றியமையா பண்டங்களை நியாயவிலை கடைகளில் இருந்து பெறுவதற்கு ஏதுவாக அங்கீகார சான்று வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒரு குடும்பத்தில் ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொருட்களை பெற்று செல்லலாம்.  விரல் ரேகை தேய்மானம் காரணமாக விரல் ரேகை சரி பார்க்கும் முறையை செயல்படுத்த இயலாத நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி பொருட்கள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்.