திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

 
high court

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி  திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது ஆர் எஸ் எஸ் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

thiruma

அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்  திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை  வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி  திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரதான வழக்கில் திருமாவளவன் மனுதாரர், எதிர்மனுதாரரக இல்லாதபோது மனுவை எப்படி விசாரிக்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனு எண் நடைமுறை முடிந்த பின்னர் வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.