சிம்பு வழக்கில் விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு

 
sv

சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

 தேமுதிகவின் எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் ராயப்பன் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை தயாரித்தார்.  இப்படத்தில் நடிக்க சிம்புவுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பு சொல்கிறது.   ஆனால்,  ஒரு கோடியே 51 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பு சொல்கிறது.

இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து   சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் .  இந்தப் படம் படும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அதற்கு சிம்பு மட்டுமே காரணம் என்றும் மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

vs

மைக்கேல் ராயப்பன் தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக சொல்லி ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம்,  நடிகர் விஷால் ஆகியோரையும் எதிர் மனுதாரராக சிம்பு சேர்த்திருந்தார்.

 இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அலுவலர்களை அரசு நியமித்திருக்கிறது.  இதனால் வழக்கில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்று கோரி விஷால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

 இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருக்கும் விஷாலை நீக்க சிம்பு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.   இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர்,   எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய விஷாலின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.    அதன் பின்னர் வழக்கின் மறு விசாரணையை வருகின்ற மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.