ரெப்போ வட்டி 0.5% உயர்வு.. தனிநபர், வாகன கடனுக்கான வட்டி உயர வாய்ப்பு..

 
ரெப்போ வட்டி- சக்திகாந்த தாஸ் அறிவிப்பு ரெப்போ வட்டி- சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம்  0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு  5.9 % மாக அதிகரித்துள்ளது.  

வங்கிகளில் கடந்த மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 4.9% ஆக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்   5.4% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் மேலும்  0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.  இதுகுறித்து   டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம்,  வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  

ரெப்போ வட்டி விகிதம்

தொடர்ந்து பேசிய அவர்,  இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றும்,  உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.  நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது  என்றும் சக்தி காந்ததாஸ் கூறினார்.  தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் கூறிய அவர்,  முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும்  குறிப்பிட்டார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.