யூடியூப் பார்த்து நகைக்கடையில் கைவரிசை... ஆசிரியர் மகன் கைது!!

 
arrest

யூடியூப் பார்த்து நகைக்கடையில் திருட முயன்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.

youtube

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாத்.  இவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது நகை கடையில் நள்ளிரவில் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு நகை திருட மர்ம நபர் ஒருவர் முயற்சித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  அப்பகுதிவாசிகளின் தகவலையடுத்து இதுகுறித்து போலீசில் பத்ரிநாத் புகார் அளித்து உள்ளார்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாயுடன், தடயவியல் நிபுணர்களுடன் தடயங்களை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.  இதில் நகைகடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கரூர் மாவட்டம் மாயலூர் பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் என்பது தெரியவந்தது , இவர் மாயலூர் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்த  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமசாமி என்பவரின் மகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

men arrest

இதையடுத்து புளியம்பட்டி வார சந்தையில் சுற்றித்திரிந்த ராஜபாண்டியனை  போலீசார் மடக்கிப் பிடித்து,  அவரிடம் விசாரணை நடத்தினர்.  இதில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்த இவர்,  கடன் பிரச்னை காரணமாக யூடியூப் பார்த்து  திருட முயற்சி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜபாண்டியனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.  ராஜபாண்டியன் கைபேசி சிக்னல் மூலமாக போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.