சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் மாலன் : முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து..

 
சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் மாலன் : முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து..

சாகித்திய அக்காடமி விருது வென்றுள்ள  ஊடகவியலாளரும், எழுத்தாளாருமான மாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

   2021-ம் ஆண்டுக்கான  சாகித்திய அக்காடமி  விருது  பெறும்  சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களின் விவரம் டெல்லியில் நேற்று முந்தினம்  அறிவிக்கப்பட்டது.   அதில் தமிழ் மொழிக்கான விருது  மூத்த எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி  எழுதிய ,  பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி பேசும் ‘Chronicle of a Corpse Bearer’ என்ற ஆங்கில நாவலை  அவர்,‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.  இந்த படைப்பு தற்போது, 2021-ம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வகியுள்ளது.   

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்

இதனையொட்டி எழுத்தாளர் மாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாடமி  விருது பெற்றுள்ள  ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்! அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஊடகத்துறையின், பத்திரிக்கை துறையின் பிதாமகராக போற்றப்படும் திரு.மாலன் அவர்களின் (மொழிபெயர்ப்பு) படைப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நூலுக்கு  #SahityaAkademi விருது மொழிபெயர்ப்பு பிரிவில்  வழங்கப்பட்டுள்ளது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் மாலன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.