சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடையில் திருட்டு - ஊழியர் கைது

 
Saravana Store

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடையில் சிறுக சிறுக 26 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை தியாகராய நகர் துரைசாமி சாலையில் சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தைச் சேர்ந்த 26 வயதான ஐசக் சாமுவேல் என்பவர்,  ஆன்லைன்  புக்கிங் மற்றும் டெலிவரி பிரிவு பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் நகைக்கடையில்  தணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் 625 கிராம் எடை கொண்ட 26 லட்சம் மதிப்பிலான தங்க  நகை, தணிக்கையின் போது, குறைவாக இருந்துள்ளது.அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது  ஐசக் சாமுவேலின் கைவரிசை என கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஐசக் சாமுவேல் விடுப்பில் சென்றதும் தெரிந்தது. இது தொடர்பாக சரவணா ஸ்டோர் மேனேஜர் ராமமூர்த்தி,  மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ஐசக் சாமுவேலை பிடித்து விசாரணை நடத்தினர்.

Thief

பட்டதாரி இளைஞர் ஐசக் சாமுவேல் சிறு வயது முதல் மும்பையில் பெற்றோருடன் வசித்து வந்தும், நகைக்கடை உரிமையாளருக்கு வேண்டப்பட்ட தனது உறவினர் ஒருவர் மூலம் இந்த நகைகடையில் பணிக்கு சேர்ந்துள்ளார். பழைய நகைகளை வாங்கி எடை போட்டு பெட்டகத்தில் வைக்கும் பிரிவில் இருந்த ஐசக், எடை குறைவான நகைகளை அதிக எடை இருப்பதாக போலி கணக்கு எழுதி, 26 லட்சம் மதிப்பிலான நகைகளை சிறுக சிறுக திருடி அடகு வைத்தது தெரியவந்தது.

சிறுவயது முதலே ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ஐசக் சாமுவேல் ஊரடங்கு காலத்தில் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்தவும், ஆடம்பரமாக தொடர்ந்து செலவு செய்வதற்கும் நகைகளை திருடியது விசாரணையில் ஒப்புக்கொண்டார்.நகைக்கடையில் திருடிய நகைகளை, ரூபாய் 26 லட்சத்துக்கு அடகு வைத்து , கடன்காரர்களுக்கு கொடுத்ததுடன் ஜாலியாகவும் செலவு செய்துள்ளார்.இதையடுத்து அடகு வைத்த கடையிலிருந்து,  ஐசக் சாமுவேல் அடமானம் வைத்த சுமார் 80 சவரன் நகைகளை மீட்ட போலீசார், அந்த நபரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.