மழைநீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்..

 
sasikala

சென்னை மாநகரில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளையும், மெட்ரோ பணிகளையும் தமிழக அரசு விரைந்து முடித்திட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறுகின்ற மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளாலும், மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம், மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் என்று அனைவராலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொருநாளும் சென்னை வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்ப வருவதற்கே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது.  

Rain water canel

இதில் குறிப்பாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று வர அரசு பேருந்துகளை நம்பி கால் கடுக்க வெகுநேரம் காத்திருந்து சென்று வருவதற்குள் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதாக வேதனைப் படுகிறார்கள். அதிலும் பேருந்துகள் செல்ல முடியாத சாலைகளில் வேலை நடைபெறும் இடங்களில் வசிப்பவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். அதேபோன்று சாலை ஓரம் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் நிலைமையோ பரிதாபகரமாக இருக்கிறது. வீட்டு வாசலிலேயே வெட்டி வைத்துள்ள பெரிய பள்ளத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பற்ற முறையில் தினமும் தாண்டி செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. மேலும் சிறு கடைக்காரர்களும் வியாபாரம் இன்றி வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள்.  

rain

இந்த பணிகள் என்றைக்கு முடியுமோ என்று பொதுமக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில இடங்களில் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். இது போன்று பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெறுவதை பார்க்கும்போது தமிழக அரசுக்கு முறையான திட்டமிடல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதுபோல் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பும், எந்த வித ஒத்துழைப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது.  விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில்,  கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

rain

ஒப்பந்ததாரர்கள் இரவு பகல் என்று தொடர்ந்து 24 மணிநேரமும் பணிகளை மேற்கொண்டால்தான் விரைந்து முடிக்க முடியும்.  கட்டுமான பணிகள் நடைபெறுகின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு போதிய மாற்று வழிகளை ஏற்படுத்தி உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். ஒரு மணிநேரம் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கின்ற சூழலில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நடைபெறுகின்ற கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க திமுக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.