அடடே சசிகலா கொடுத்த பாசிட்டிவ் சிக்னல்... இரட்டை இலைக்கு கிடைத்த "தேர்தல்" பூஸ்ட்!

 
சசிகலா

மறைந்த முதலமைச்சரும் திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவுநாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திமுகவும் திமுகவிலிருந்து அண்ணா கொள்கைகளைக் கொண்டு பிரிந்த அதிமுகவும் அண்ணாவின் நினைவலைகளை அசைபோடுகின்றன. இரு கட்சிகளின் தலைவர்களும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்து வருகின்றனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் மரியாதை செலுத்தினர்.

புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?' - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!

அந்த வகையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "அண்ணாவின் இதயக்கனியாக அண்ணா கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல இயக்கத்தைத் தொடங்கினார் புரட்சித்தலைவர். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். 

அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வருவோம். யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எட்டு வருட காலத்தில் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.  நிச்சயம் அனைவரையும், அரவணைத்து செல்வோம், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எனது தலைமை செயல்படாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக பெருவாரியான வெற்றியைப் பெறும். தேர்தலுக்குப் பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன்" என்றார். தேர்தல் நடைபெறும் சமயத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக சசிகலா பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.