பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க உத்தரவு!!

 
dpi building

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்  என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

tn

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பள்ளியில் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீக்ஷித் நேற்று பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் உதவியாளர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகன பாதுகாப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். தனியார் பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்க வேண்டும், மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் , உதவியாளர் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும்,  வாகனத்தில் இருந்து இறங்கிய பின் நான்குபுறமும் மாணவர்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது,  பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போட கூடாது உள்ளிட்ட விதிகளை குறிப்பிட்டுள்ளார்.

dpi

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக இயக்கப்படும்  வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.  போக்குவரத்து துறையால் பள்ளிகளுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு முதலில் அனுமதி தரவேண்டும்.  அத்துடன் வாகனத்திற்கு தரச்சான்று உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும்.  பள்ளி வாகனங்களின் தர சான்றிதழ் புதுப்பிப்பது, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும், பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என்ற பெயரில் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.  அத்துடன் அந்த வாகனம் பள்ளி பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  அதில் முதலுதவி பெட்டி கண்டிப்பாக இடம்பெறவேண்டும். அதேபோல் தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.