நிதிநிலை அறிக்கை அல்ல! விளம்பர அறிக்கை – சீமான்

 
seeman

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது யாதொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாத வெற்று விளம்பர அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் ஆளும் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.கல்வித்துறையில் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை எனப் பல சவால்களை எதிர்கொள்ளும் தற்போதையக் காலகட்டத்தில், கல்விக்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கானத் தொகையை அதிகப்படுத்தாமல், குறைத்திருப்பது மிகத்தவறானத் திட்டமிடலாகும். மேலும், மகளிருக்கான 1000 ரூபாய் மாத உரிமைத்தொகை, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, எரிபொருள் விலை குறைப்பு, சமையல் எரிகாற்று உருளைக்கு 100 ரூபாய் மானியம் போன்ற வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசி, மாநில அதிகாரத்தை கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அவற்றை நிறைவேற்ற எந்தவொரு முன்னெடுப்பையும் செய்யாமல் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருப்பது நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் துரோகச்செயலாகும். 

budget

அதுமட்டுமின்றி, மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவித்தொகையாக மாதம் 1,500 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, மீனவக்குடும்பங்களுக்கு 2 இலட்சம் வீடுகள் கட்டித்தரும் அறிவிப்பு போன்ற வாக்குறுதிகளைப் பற்றி இந்நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து, அவர்களின் வயிற்றில் அடிக்கும் வஞ்சகச்செயலாகும். 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்தக்கடன் 6,53,000 கோடி ரூபாய் எனும் நிதியமைச்சரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 2022-23 ஆம் நிதியாண்டில் முதலீட்டுச்செலவுகள் 43,000 கோடி ரூபாய்தான் எனத் தெரிவித்தப் பிறகு, ஒரே ஆண்டில் மேலும் 90,000 கோடி ரூபாய் கடன்கள் அதிகமானது எப்படி? என்பது புரியவில்லை. அப்படியென்றால், இந்த அரசு அன்றாடச்செலவுகளுக்கே கடன் வாங்கும் சூழ்நிலையில்தான் உள்ளதா? எனும் அடிப்படை கேள்வி எழுகிறது. 

seeman

2022-23 ஆம் நிதி ஆண்டில் மாநிலத்தின் வருமானம் அனைத்து விதத்திலும் அதிகரிக்கும் எனும்போது 90,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டிய தேவையென்ன? இவ்வாறாக, மாநிலத்தின் செலவினங்களை கடந்த ஓராண்டில் திமுக அரசு கட்டுக்குள் வைக்கத் தவறியது கண்கூடாகத் தெரிகிறது. இதுவெல்லாம், திமுக அரசின் நிர்வாகத்திறமையின்மையையே படம்பிடித்துக் காட்டுகிறது. ஒட்டுமொத்தத்தில், திமுக அரசின் இந்நிதிநிலை அறிக்கையினை, மக்களுக்கு நலன் பயக்காத வகையில் வழமையாக வரும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட விளம்பர அறிக்கையென மதிப்பிடுகிறேன்.