"இரவில் திறந்திருக்கும் கடைகள்..." - தீபாவளி பண்டிகையால் டிஜிபி அதிரடி உத்தரவு!!

 
dgp sylendra babu

இரவில் திறந்திருக்கும் கடைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு  டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 

diwali shopping
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று ஏற்கெனவே உத்தரவு உள்ளது. அதை அனைத்து போலீஸாரும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

dgp

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச் சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். அதேபோல உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிர்ணயித்துள்ள பட்டாசு வெடிக்கும் நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை"  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.