சில்க் ஸ்மிதா ஆய்வு கட்டுரை - இப்படி எல்லாம் இருந்தால் எப்படி கல்வித்தரம் உயரும்

 
sஇ


 நடிகை சில்க் ஸ்மிதா திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த போது நான் நிராகரித்தேன்.  ஆனால் நான் சென்ற பின்னர் அதே கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்று விட்டார்.  இப்படியெல்லாம் இருந்தால் எப்படி  கல்வித்தரம் உயரும் என்ற ஆதங்கத்துடன் கேட்கிறார் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி.

 அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தின் தரம்  குறைந்து விட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.   இதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் தரத்தை உயர்த்துவது பற்றி பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் உடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தியுள்ளார்.   இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 131 கலை ,அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 முதல்நாளான நேற்று அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.   துணைவேந்தர் கௌரி மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். 

ச்ல்

 அந்த நிகழ்வில் பேசிய ராமசாமி,   சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன கருத்து உண்மையாக கூட இருக்கலாம்.   நமக்கு தெரியவில்லை.   ஆனால் இதனை சரி செய்ய வேண்டும் .  அதற்காகவே ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. விருப்பமில்லாத மாணவர்களும் விரும்பும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 தொடர்ந்து பேசிய ராமசாமி,   நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த போது  ‘திரைத்துறையில் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம்’ என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை ஒருவர் சமர்ப்பித்திருந்தார்.    முனைவர் பட்டத்திற்காக அந்த கட்டுரை சமர்ப்பிக்க பட்டிருந்தது.   நான் அந்த ஆய்வுக்கட்டுரையை நிராகரித்து விட்டேன்.  அதன் பின்னர் நான் அங்கிருந்து துணைவேந்தராக சென்று விட்டேன்.  அடுத்த  10 நாட்களில் அதே ஆய்வு கட்டுரையை ஏற்றுக் கொண்டு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.   இப்படியெல்லாம் இருந்தால் எப்படி கல்வித்தரம் உயரும் என்று ஆதங்கப்பட்டார்.

 நடிகை சில்க்ஸ்மிதா தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது .  திரையுலகத்திற்கு வெளியேயும் சில்க் ஸ்மிதா என்ற பெயர் பெரிதும் அடிபட்டது.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சில்க் ஸ்மிதா பெயரை உச்சரித்து வந்தனர்.  இன்றைக்கும் கூட எத்தனையோ நடிகைகள் வந்த பின்னரும் சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை.  அதுவும் 90 களில் சில்க் ஸ்மிதாவின் தாக்கம் ரொம்பவே அதிகமாக இருந்தது.  அதனால்தான் முனைவர் பட்ட ஆய்வுக்காக சில்க் ஸ்மிதா குறித்து ஆய்வு செய்யப்பட்டு  கட்டுரை சமர்ப்பிக்க பட்டிருக்கிறது.  ஆனால் அதுமாதிரியான ஆய்வுக்கட்டுரை கல்வியின் தரத்தை குறைத்துவிடும் என்று தான் ராமசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.