ஆன்மீக சுற்றுலா சென்ற 6 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு - ஜி.கே.வாசன் இரங்கல்!!

 
ttn

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 6 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது  என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 6 பக்தர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது .  பூண்டி மாதா கோவில் புகழ்மிக்கது , தூத்துக்குடியில் இருந்து பேருந்தில் பூண்டி மாதா ஆலயத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 40 பேரில் 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர் . ஆற்றின் மணலில் அரிப்பு ஏற்பட்டிருந்ததால் , ஆழமான பகுதிக்கு தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன . தீவிர தேடுதலுக்குப் பிறகு 6 பேரும் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

ttn

இதனால் ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்த பக்தர்கள் மிகவும் கவலை அடைந்தனர் . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மீளாத்துயரத்தில் இருக்கின்றனர் . ஆன்மீக சுற்றுலாவுக்கு வருவோருக்கு வரும் வழியில் , செல்லும் வழியில் ஏதேனும் ஆறு , குளம் , ஏரி என எந்த நீர் நிலையாக இருந்தாலும் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை , முன்னேற்பாடான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவும் சாமி தரிசனம் செய்ய வரும் காலங்களில் , முக்கிய விழாக்கள் நடைபெறும் காலங்களில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதும் , கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தமிழக அரசின் தொடர் பணியாக இருக்க வேண்டும்.

gk

தற்போது கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர்கள் ஆற்றின் ஆழம் , மணல் அரிப்பு ஆகியவற்றை பற்றி தெரியாமல் உயிரிழந்தவர்கள் . எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு , பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும் . தமிழக அரசு , உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் . ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.