பெரும் பரபரப்பு! ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் நில அதிர்வு

 
earth earth

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. கீரனூர் கிராமத்தில் மீண்டும் கடும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. கீரனூர் கிராமத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கடும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் ரோட்டில் வந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நில அதிர்வினால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களும், இரண்டு மூன்று வீடுகளில் ஓடுகளும் உடைந்து சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து லேசான வெடி சத்தம் போல் தொடர்ந்து இரண்டு தினங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் மற்றும் நில அதிர்வு ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த சப்தம் நில அதிர்வினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. 

keranur

அதன்பின் இந்த சத்தம் படிப்படியாக குறைந்து இதுவரை சத்தமில்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.50 மணி அளவில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. அதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. அதனை தொடர்ந்து இரவு வந்த  ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து  சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளை வரவழைத்து இந்த சத்தத்திற்கும் நில அதிர்விக்கும் என்ன காரணம் என்று தெரிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் வீடுகள் இடிந்துவிடுமோ என்ற பீதியில் உள்ளனர்.