’தனியார் மயம் நோக்கி முதல் அடி.. ஒன்றைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள்..’ - சு.வெங்கடேசன் எம்.பி.,கண்டனம்..

 
su venkatesan

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய செபியில் நேற்று அறிக்கை அளித்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி.  கண்டனம்  தெரிவித்திருக்கிறார்.

65 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனமான எல்.ஐ.சி ரூ.39.6 லட்சம் கோடி  மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நிறுவனமாக இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டின் கணக்கின்படி இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் காப்பீட்டு  நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துக்களை காட்டிலும், எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 3.3 மடங்கு அதிகமாகும்.  அனைத்துத் தரப்பிரனும் எளிதில் அணுகும் படி, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக  இருந்த  எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

LIC

இதற்கான நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில், அண்மையில்  ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்  அனுமதி அளித்திருந்தது. அதனையடுத்து  அரசின் 5%  பங்குகளை, அதாவது 31.6 கோடி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.  அதற்காக எல்.ஐ.சி பங்கு விற்பனை வரைவு விண்ணப்பத்தை, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான  செபி அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த 5%பங்கு விற்பனை மூலம், 63 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

lic

இந்நிலையில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய செபி அமைப்பிடம், மத்திய அரசு   நேற்று வரைவு  அறிக்கை அளித்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி.  கண்டனம்  தெரிவித்திருக்கிறார்.  தனியார் மயம் நோக்கி முதல் அடி என்று குறிப்பிட்டுள்ள அவர்,  ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள் எனவும், ஒன்றுபட்டு வென்றெடுப்பதை விவசாயிகள் கற்றுகொடுத்ததை தேசம் முன்னெடுக்கட்டும்  என்றும் ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.