16 இடங்களில் குண்டு வீசப்படும்... காவல்நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் - போலீசார் உஷார்...

 
Pollachi police station

16 இடங்களில் குண்டு வீசப்படும்... காவல்நிலையத்திற்கு மிரட்டல் கடிதம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மர்மநபர்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிராக நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் உள்ளனர். இதனிடையே கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

letter

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையெறி குண்டு வீசப்படும் என மர்மநபர்கள் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறை எங்களுக்கு எதிரியல்ல எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் கோவை மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகின்றது. தற்போது பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.