இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த திமுக திட்டம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai

மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது  விசைத்தறி உரிமையாளர்களுக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதை செயல்படுத்தாமல் மின் கட்டணத்தை யூனிட்டிற்கு, 70 காசு உயர்த்தியுள்ளது. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள், 59 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்திய பின் தான், நெசவுக்கு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

Annamalai

இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த, தி.மு.க  அரசு திட்டமிட்டுள்ளது. தலா, 1.80 கோடி சேலைகள், வேட்டிகளை நெய்ய, நுால் கொள்முதலுக்கு, டெண்டர்கள் கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. நுால் வழங்கிய பின், மொத்த ஒப்பந்தத்தை முடித்து கொடுக்க, குறைந்தது ஐந்து மாதங்களாகும். அதற்கு ஒரு சேலைக்கு, 200 ரூபாயும்; ஒரு வேட்டிக்கு, 70 ரூபாயும் நெய்ய கூலியாக அரசு வழங்க வேண்டும். இப்போது, டெண்டர் கொடுப்பதில் தாமதம் ஆவதால், நெசவாளர்களுக்கு, 486 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த டெண்டரை வழங்கவில்லை எனில், பா.ஜ.க மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.