மத்திய அரசின் ஆவணம் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கு எப்படி போனது?- அண்ணாமலை கேள்வி

 
Annamalai

பயங்கரவாத தாக்குதல் நடக்கவுள்ளதாக எச்சரிக்கை வந்தும் உளவுத்துறையின் சுற்றறிக்கையை கண்டுகொள்ளாதது ஏன்?  என தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து (29-ந்தேதி) ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. தமிழக காவல் துறை டி.ஜி.பி.யாகிய சைலேந்திர பாபுவின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், தமிழக பா.ஜ.க. மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் பல கருத்துகள் கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி. ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம்.   விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துகள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல் துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். இம்மாதம் 26-ந்தேதி இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதை வரவேற்று மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில ஆலோசனைகளை அரசுக்கு முன்வைத்தோம்.

annamalai

தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்பதும் நாங்கள் கொடுத்த ஆலோசனையில் ஒன்று 27-ந்தேதி மத்திய உளவுத்துறை கொடுத்த குறிப்பிட்ட எச்சரிக்கைக்கு பின்னரும் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது ஏன் என்றும் பயங்கர வாத சதிச் செயலில் ஈடுபட்ட ஜமேஷா முபினை கண்காணிக்க கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை காவல் துறை பின்பற்றாதது ஏன் என்பதையும் கேட்டிருந்தோம். 18-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும், இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற வாதத்தை நேற்று பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல் துறை தலைமை முன்வைத்துள்ளது. மேலும், 18-ந்தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ந்தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பொய். 21-ந்தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல் துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

 கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல் துறை மறுக்குமா?. 21-ந்தேதி அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?. "சீக்ரெட்" என்று குறிப்பிடப்பட்ட மத்திய அரசின் ஆவணம் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கு எப்படி போனது. இதை காவல் துறை தலைமை அவருக்கு வழங்கியதா? அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினார்களா?. இதுபோன்ற நடவடிக்கைகள் தான் நடந்த பயங்கரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சி. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த 23-ந்தேதிக்கு முன்னரே ஜமேஷா முபின் பற்றி தகவல்கள் காவல் துறை தலைமை மற்றும் உளவுத் துறைக்கு காவல் துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபின் 89-வது இடத்தில் உள்ளார்.

 இந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டைவிட்டுள்ளது தமிழக காவல் துறையின் உளவுத்துறை. விசாரணையின் போக்கை திசை திருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம். பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பியது எப்படி?. 23-ந்தேதி நடந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது, தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை அறிவிக்காமல் காவல் துறை மற்றும் தமிழக அரசு மவுனமாக இருப்பதன் காரணம் என்ன?. தமிழக ஆளுநர் இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் தி.மு.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. வழக்கின் போக்கை திசைதிருப்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?. நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்தபோது எனது நடவடிக்கைகளை நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறேன். மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை, ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.