கச்சத்தீவை பாஜக அரசு நிச்சயம் மீட்கும் - வி.பி.துரைசாமி

 
vp duraisamy

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மத்திய பாஜக அரசு நிச்சயம் மீட்கும் என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வி.பி.துரைசாமி கூறியதாவது:  தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய பாஜக அரசு 'அக்னிபத்' திட்டத்தை கொண்டு வந்தது. அதில், தேர்வான வீரர்களிடம் நான்கு ஆண்டுகளுக்கு பின் கருத்து கேட்டு, குறைகள் இருந்தால் அதனை, எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசலாம், அதை செய்யாமல், இளைஞர்களை போராட்டத்திற்கு துாண்டி விட்டு, தேச பாதுகாப்பில் அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல. ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது சின்ன பிள்ளை தனமாக உள்ளது என்றார். 

தொடந்து பேசிய வி.பி.துரைசாமி, கச்சத்தீவை மீட்பதற்காகவே, அங்குள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள, மத்திய அரசால் அண்ணாலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனவும், கச்சத்தீவை மத்திய பாரதிய ஜனதா அரசு நிச்சயம் மீட்கும் எனவும்,  அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணமாக இருப்பார் எனவும் வி.பி.துரைசாமி கூறினார்.