தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து - முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்

 
cm governor

சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

சுதந்திர தினம், குடியரசு தினம், புத்தாண்டு ஆகிய முக்கியமான நாட்களில் தமிழக ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதேபோல் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் கடந்த தமிழ் புத்தாண்டு அன்றும் தேனீர் விருந்து அளித்தார். ஆனால் திமுக அரசு அந்த தேநீர் விருந்தை புறக்கணித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட யாருமே இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.  நீட் மசோதாவை நீண்ட நாட்களாக கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை சுட்டிக்காட்டி தேநீர் விருந்தை புறக்கணித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். திமுக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில், சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார். இந்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதேபோல் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.