மத்திய ஜவுளித் துறை அமைச்சருன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

 
stalin stalin


பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சரை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.5.2022) மாண்புமிகு ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.1.2022 அன்று  பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கி மாண்புமிகு ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

CM

மேலும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் அவர்களை நேற்று (18.5.2022) இது தொடர்பாக சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தை  அளித்துள்ளார்கள்.