ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் புதிய எழுச்சி பெறும் - கே.எஸ்.அழகிரி நம்பிக்கை

 
ks

ராகுல் காந்தியை விமர்சித்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகிய நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் புதிய எழுச்சி பெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகினார். ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான முடிவுகளாலயே காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் படுதோல்வி சந்தித்ததாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

Ks Azhagiri

இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுல் காந்தி அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. குலாம் நபி ஆசாத் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர். கட்சியில், ஆட்சியில் மிக முக்கியமான பதவிகளை வகித்தவர். இப்போதுதான் ராகுலிடம் குறைகள் இருப்பது அவருக்கு தெரிந்ததா? இந்த குறைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு வெளியேறி இருக்கலாமே. ஏன் போகவில்லை. மரத்தில் நிறைய பழங்கள் பழுத்து கிடந்தால் பறவைகள் இருக்கும். பழங்கள் இல்லை என்றால் பறவைகளும் பறந்து விடும். அதேபோல்தான் காங்கிரசிலும் நடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி இருந்தது. அதாவது பழங்கள் பழுத்தது. அதுவரை அனுபவித்தார்கள். இன்று அனுபவிப்பதற்கு எதுவுமில்லை. அவ்வளவு தான். பறவைகள் பறப்பது போல் பறக்கிறார்கள். நிச்சயமாக குலாம் நபி ஆசாத்தைபோல் வேறு யாரும் செல்லமாட்டார்கள். வரும் காலத்தில் ராகுலின் தலைமையில் காங்கிரஸ் புதிய எழுச்சி பெறும். இவ்வாறு கூறினார்.