பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது - டிஜிபி எச்சரிக்கை

 
dgp sylendrababu

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர். இதேபோல் தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மத அமைப்பினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  சோதனை நடத்தியதை தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.