மின் கட்டணத்தை சரியாக கணக்கிடாவிட்டால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

 
senthil balaji

மின் கட்டண கணக்கீடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு ஏற்படாத விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுங்கம் சந்திப்பு- வாலாங்குளம், பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:  மின் கட்டண கணக்கீடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று புகார் கூறப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதில், தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களிடம் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் மழையால் சேதம் ஏற்பட்டால் மாற்ற 1 லட்சத்து 33 ஆயிரம் மின் கம்பங்கள், 10 ஆயிரம் கிலோ மீட்டா் மின் கம்பிகள் மற்றும் மின் தளவாடப் பொருள்கள் கையிருப்பு உள்ளன.எனவே, மழையால் மின்தடை உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய முடியும். கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 35 ஆயிரம் புதிய மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.இதுவரை 10 லட்சத்து 77 ஆயிரம் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.