தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு

 
Tuticorin Shooting

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாகவும்,  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இதில் இடம் பெற்றிருந்தன. டிஐஜி கபில்குமார் ,  எஸ்.பி. மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் 3 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.