85% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

தமிழகத்தில் 85% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
 தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது வாரத்திற்கு ஒருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்த நிலையில், தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் மாதம் ஒரு முறை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இன்றும் 31வது தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தொடர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால், தமிழகத்தில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.